
அமெரிக்க (United States) அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் ட்ரம்ப் பதவியெற்ற நாளிலிருந்து பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கல்வி திணைக்களத்தை மூடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தரவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று (20.03.2025) கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் கல்வித்துறையின் முழு அதிகாரமும் இனி மாகாணங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உத்தரவு அமெரிக்காவின் கூட்டாட்சி கல்வித் துறையை நிரந்தரமாக நீக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித்துறையை, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் கலைக்க முடியாது. ஆனால் ட்ரம்ப்பின் உத்தரவு, கல்வித்துறைக்கான நிதி மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக உள்ளது.
கல்வித்துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கல்வித்துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை வலியுறுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஜனநாயக கட்சியினரும், கல்வியாளர்களும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.