நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர்.குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த கியூ.ஆர். முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்து பெற்ற கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருளை பெற முடியும். அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த முறைமையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
QR குறியீட்டை பெறும் முறை
ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும்.
வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு
வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
* பேருந்துகள் – 60 லீற்றர்
* மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்
* வேன் – 40 லீற்றர்
* மோட்டார் கார் – 15 லீற்றர்
* லொறி – 200 லீற்றர்
* வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர்
* முச்சக்கர வண்டி – 15 லீற்றர்
* விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்
* குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர்
தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
![]()
