நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவும் 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த வாரம் 350 முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை தற்போது 600 முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 250 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் குடை மிளகாயின் விலை 400 முதல் 450 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், 150 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபா வரை உயர்ந்துள்ளது.
கொழும்பு மெனிங் பொதுச் சந்தையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவு 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபா வரை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பண்ணைகளிலிருந்து சந்தைக்கு முட்டைகள் குறித்த விலைகளின் அடிப்படையில் விநியோகிக்கப்படுவதால், உற்பத்தியாளர்களால் போதிய இலாபத்தை ஈட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
