பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உருவாக்கப்பட்டு 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிவடையும் கொடூர நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் ‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கான விசாரணைக் காலம், சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காலம் அல்லது நீதிமன்ற விசாரணை முடிவடையும் காலம் ஆகியவற்றுக்கு எந்தவொரு சட்டபூர்வ காலவரையறையும் இல்லை.
பாதுகாப்பு அமைச்சரின் (ஜனாதிபதி) அனுமதியுடன், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையில் ஒருவரை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். இதனை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.
இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளில் 95 சதவீதமானவை சித்திரவதைகள் மூலம் பெறப்படும் ‘சுய ஒப்புதல் வாக்குமூலங்களை’ (Confessions) அடிப்படையாகக் கொண்டவை.
இதனைத் தடுப்பதற்காக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை (FR) மனுக்களைத் தாக்கல் செய்து, தாம் பல வழக்குகளை விரைவுபடுத்தியதாக கே.வி. தவராசா குறிப்பிட்டார்.
யார் பாதிக்கப்பட்டவர்கள்?: யுத்தம் முடிவடைந்த பின்னர் இளைஞர்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பல தரப்பினரும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம் வாதாடிய வழக்குகளில் பலர் 15 முதல் 18 ஆண்டுகள் வரை சிறையிலிருந்துவிட்டு இறுதியில் ‘நிரபராதிகள்’ என விடுதலையாகியுள்ளனர். இன்னும் சிலர் 22 வருடங்களாக சிறையிலேயே இருக்கின்றனர்.
இறுதியில் அவர்கள் நீதிமன்றத்தால் ‘நிரபராதி’ என விடுவிக்கப்பட்டாலும், அதற்குள் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆயுட்காலமும், இளமையும் சிறையிலேயே வீணடிக்கப்பட்டு விடுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
![]()
