யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் பூநகரிப் பாடசாலைகளுக்கு கற்பித்தல் பணிக்காக பயணிக்கும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கடுமையான போக்குவரத்து சிரமங்களையும் மன அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வீதி வழியாக இயங்கும் பேருந்து அடிக்கடி தாமதமாக வருவதால், ஆசிரியர்களால் காலை 7.30 மணிக்குள் பாடசாலையைச் சென்றடைய முடியாத நிலை உருவாகியுள்ளது.
வெறும் 3 முதல் 5 நிமிட தாமதமே பல ஆசிரியர்களுக்கு அரை நாள் விடுப்பு பதிவு செய்யப்படும் துரதிர்ஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேருந்திலிருந்து இறங்கியவுடன் அவசர அவசரமாக பாடசாலையை நோக்கி ஓடிச் செல்ல வேண்டிய நிலை காரணமாக உடல் சோர்வு, அதிக வியர்வை, உடல்நலப் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்வதுடன், வீதியில் ஓடிச் செல்வதைப் பார்த்து சிலர் கேலி செய்வதும் மன உளைச்சலை அதிகரிப்பதாக ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
பொதுப் போக்குவரத்தின் நேரப் பிரச்சினையால், பல ஆசிரியர்கள் கட்டாயமாக மோட்டார் சைக்கிள் அல்லது பிறரின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் ஆசிரியர்கள் நீண்ட தூரம் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டியிருப்பதால், தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, யாழ்ப்பாணம்–மன்னார் வீதி வழியாக காலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்தின் பயண நேரத்தை குறைந்தது 5 நிமிடங்கள் முன்னதாக மாற்றி அமைக்குமாறு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()
