இன்று (13.05.2026) நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டில் நிலவும் எரிபொருள் விலை மற்றும் டீசல் விநியோகம் குறித்து முக்கியமான சில விளக்கங்களை அளித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான அடக்க விலை தற்போது 720 ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அரசாங்கம் தற்போதைய நிலையில் ஒரு லீற்றருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். தற்போது டீசல் ஒரு லீற்றர் 392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உண்மையான அடக்க விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பதால், தற்போதைய நிதிச் சூழலில் எரிபொருள் விலையை மேலும் குறைப்பது சவாலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை எனத் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்பவே விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளித்தார்.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் 43 சதவீதத்தை தனியார் நிறுவனங்களே (LIOC, Sinopec போன்றவை) கையாளுகின்றன. சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாவிட்டால், எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால், சிபெட்கோ (CPC) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான விலை இடைவெளியைக் குறைப்பது அவசியமாகிறது.
![]()
