கடல் தாண்டி ஐரோப்பிய மண்ணில் இருந்து அதுவும் தொலைக்காட்சித் திரையின் முன்னிருந்து பார்த்த அந்தப் பரத ஆடல் அரங்கேற்ற நேரலை இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.
அது அந்த அரங்கேற்றம் தந்த உணர்வா?
அல்லது நினைவுகளை மீட்டெடுத்த உணர்வா? இரண்டையும் பிரித்தறிய முடியாமல், அந்த உணர்வுகளைப் பதிகிறேன்..!
கடந்த 27.08.2026 அன்று யாழில் நடைபெற்ற எமது சந்திரபரத கலாலய மாணவி செல்வி சு.மோகனப்பிரியாவின் அரங்கேற்றமே அது. கலாலயத்தில் கலை நிகழ்வுகளைச்செய்து பத்து ஆண்டுகளாகிவிட்டது. அங்கே பல மாறியிருக்கலாம் ஆனாலும் அங்கேயே விட்டுவந்த நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாகவே இருப்பதால் அதைக்காணும் ஆர்வம் அலாதியாகவிருந்தது.
நேரலையில் மோகனாவைக் கண்டபோது, சிறுமியாக அவளது ஒவ்வொரு வயது வளர்ச்சியிலும் எமது குரு நிகழ்வுகளுக்கு அரங்கேற்றி ஆடிய காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போயின. அவள் இப்போது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு ஆடுவதைப் பார்த்த உணர்வை அந்த அரங்கேற்றம் தரவில்லை. என்றோ ஒரு மேடையில், எப்போதோ ரசித்த அந்த மோகனா மீண்டும் என் முன்னால் ஆடிக்கொண்டிருப்பது போலிருந்தது.
ஆனாலும், அவளது இன்றைய வயதுக்கும் பக்குவத்துக்கும், துறைசார் தேர்ச்சிக்கும் ஏற்ற ஆடலின் முதிர்ச்சியும் அழகும் ஒவ்வொரு அசைவிலும் துலங்கியது. நேரலையின் போது இசையின் ஒலி சில வேளைகளில் குறைந்து கூடியபோதும், அவளது நடனத்தின் பாவமும் தாளமும் மட்டும் எந்தக் குழப்பமுமின்றி என்னுள் வந்து மெய்க்கூச்செறியச் செய்து கொண்டிருந்தன.
இதற்கெல்லாம் காரணகர்த்தா எமது குரு சிறிதேவி கண்ணதாசன் அவர்களுக்கே சேரும் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு மாணவருக்கு எந்த நடனம் பொருந்தும்?
நவரசங்களில் எந்தப் பாவம் அவரிடம் இயல்பாக வெளிப்படுகிறது?அவரது வயதுக்கும் திறமைக்கும் ஏற்றவாறு எந்த நேரத்தில், எப்படியொரு அரங்கில் அவரை வெளிப்படுத்த வேண்டும்? இவற்றைக் கண்டறிவதில் எமது குருவுக்கு இருக்கும் நுண்ணுணர்வு தனித்துவமானது.
மோகனா உயர்தரம் முடித்து வெளியேறும் காலத்திற்குள்ளேயே கல்லூரி நிகழ்வுகள், பிரத்தியேக நிகழ்ச்சிகள், போட்டிகள் எனப் பல்வேறு அரங்குகளுக்குள் அழைத்துச் சென்று அவளைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்திருந்தவர் எமது குரு. அவரது அத்தனை மாணவர்களுக்குமே அந்த வாய்ப்பு அவரிடம் பயின்றால் இருக்குமென்பது மிகையல்ல.
நாட்டிய நாடகங்கள், உருப்படிகள், கூத்து, பாட்டு, கிராமியம் எனப் பல்வேறு கலைவடிவங்களினூடாக மாணவர்களைப் புடம்போடுவதற்கு கூட நற்குரு அவர்.
அரங்கேற்றத்தின் ஒவ்வொரு உருப்படியினதும் அழகு வார்த்தைகள் போதாமையுடன் மனதை அழைத்துச் சென்றது. எமது குரு எப்போதும் ஒன்றைப்பார்த்துப் போலச் செய்யும் ஒரு கலைஞர் அல்ல. “அவர் ஒரு திறைமை மிகு படைப்பாளி.”
அதை ஒவ்வொரு மேடையிலும் நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
ஒருசில நாட்டிய அமைப்புகளைத் தவிர, முழு நாட்டிய அமைப்பும் எமது குருவினுடையதாகவே அந்த அரங்கேற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நாட்டிய அமைப்பு மட்டுமல்ல; தாளம், ராகம், இசை, வாத்தியக்கருவிகள் என ஒவ்வொன்றையும் தேவைக்கேற்றபடி பயன்படுத்தி அரங்கிற்கு உயிரூட்டியிருந்தார்.
மல்லாரியுடனான அந்த ஆரம்பமே, கோயிலுக்குள் நுழையும் ஒரு ஆன்மிக வாசலைத் திறந்தது போலிருந்தது.
அவரிடம் பயிலும் எந்த மாணவரும் உயர்தரம் முடிப்பதற்கு முன்பே மல்லாரியை அறியும் வாய்ப்பை வழங்கிவிடுவார். அலாரிப்பும் மரபு மாறாத புதுமையோடு பயணத்தைத் தொடங்கியது. படிப்படியாக உருப்படிகள் நகர்ந்து, பதவர்ணம் வந்தபோது இமைமூடாமல் இலயிக்க வைத்தது.
“மோகனப்பிரியா பெயருக்கேற்ற ஒரு மோகனம்.”
அவளது சுபாவமும் இயல்பிலேயே ஒரு மோகனம் என்பதை எமது குரு அறிந்திருந்தார் போலும், அதனால் தான் சல்லாப ராகத்தின் வர்ணத்தை அவளுக்குத் தந்தார். அது அவளது அனுபவ மிகு வெளிப்படுத்தலைத் தர, அந்த மோகனத்தை எங்கள் நெஞ்சிலும் நீங்காதபடி பதித்துவிட்டது. ஆறுதிருமுகன் ஐயா அவர்கள் அந்த ஆடலை ரசித்துவிட்டு கூறிய வார்த்தைகள், அருகில் இருந்திருந்தால் ஓடிச்சென்று உடனேயே சொல்ல நினைத்ததை அவரே அரங்கில் சொல்லிவிட்டது போன்ற நிறைவையும் தந்தது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பரதம் குறித்து எழுப்பிய சிந்தனைக்கேள்விகளுக்கு விருந்தினர்களாக வந்த மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான
B.H. அப்துல்கமீர் ஐயா அவர்களும், பேராசிரியர் வேல்நம்பி அவர்களும் பதில்களைத் தொட்டுச் செல்ல முனைய..
அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பான கலைப்பதிலாக அரங்கில் அரங்கேறியது எமது தமிழ் ஆசான் செல்வி ஜெயமலர் ஆசிரியரின் பாடல்வரிகளிலும், குரு சிறிதேவி அவர்களின் நாட்டிய அமைப்பிலும் உருவான மாதவியின் ஆடல்.
ஒரு கணம்…
“இது சிலப்பதிகாரத்தின் மாதவி இப்படித்தான் இருந்திருப்பாள்?”
என்ற எண்ணத்தின் உச்சத்துக்கே என்னை அழைத்துச் சென்றது அந்த நிகழ்வு. பொம்மலாட்டமும், பொய்க்காலாட்டமும் கற்பனையில் கண்முன் நிறுத்தியது அற்புதம்.
அந்தக் கணத்தில் அருகில் இருந்திருந்தால் ஓடிச்சென்று எமது குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த மகிழ்ச்சியைச் சொல்லியிருப்பேன். கண்களில் நீர் நிறையும் அளவுக்கு நான் அந்த ஆடலுக்குள் இலயித்திருந்தேன்.
அரங்கேற்றம் பல உருப்படிகளைத் தாங்கியிருந்தும் அரங்கு சலிப்பைத் தரவில்லை.
அத்தனை வேகமாக நிகழ்ச்சி நகர்ந்தபோதும், ஒவ்வொரு உருப்படிக்கும் ஏற்ப மாறிய ஆகார்ய அபிநய வெளிப்பாடுகள் பிரமிக்க வைத்தன.
பள்ளிப் பருவத்திலேயே எமது குரு எங்களுக்குள் விதைத்த ஒரு நினைவு மீண்டும் வந்தது. ஒரு நாட்டிய நாடகத்தில் பத்து பாத்திரங்கள் தேவைப்பட்டாலும் ஐந்து மாணவர்களை மட்டுமே வைத்து, அவர்களை மேடையின் பின்புறத்திலேயே கணநேரத்தில் பாத்திரங்களைச் சிறிய மாற்றங்களோடு தந்திரமாக உருமாற்றி மீண்டும் அரங்கிற்கு ஓடிவரும் அந்த வித்தையை எமது குரு எங்களுக்குக் கற்றுத்தந்திருந்த நினைவே அது.
மல்லாரியாடும் ஆடல் மங்கையாக வெளிப்பட்ட ஆடல் நாயகி; குங்கும அழகோடு அம்மனாகினார், பின் கோபிகையாகி, நெற்றியில் நாமமிட்டு கண்ணனாகி, பின்னர், திருநீற்றில் முருகனாகி, கந்தரலங்காரத்தில் பக்தையாகி பரதக்கலைக்கே மாதவியாகிப் பக்தியும் பாவமும் மரபு பிளவுபடாமல் நிருத்த, நிருத்திய, நாட்டிய வடிவங்கள் குருவின் நட்டுவாங்கத்தில் புதைந்து புதுமை நிறைந்து நின்ற அந்தப் பரத ஆடல், பரதம் என்னும் கலை ஆன்ம ஈடேற்றத்தின் ஓர் உச்ச வெளிப்பாடென்பதைக் காட்டியது.
யாழ்ப்பாணத்தின் இன்றைய முருக பக்திக் காலத்தை கந்தரலங்காரமும் கீர்த்தனையும் உணர்த்தின. பொன்னாலைப் பெருமாளின் சிறப்பை ஆண்டாளாகக் காட்டிய அரங்கையும் பருக முடிந்தது. கலையினூடாக காலச்சூழலையும், அக,புறப் பண்புகளைப் புகுத்திப் படைப்பதில் எமது குரு சளைத்தவரல்ல.
மோகனாவின் ஒவ்வொரு ஆடலும் அடுத்த உருப்படிக்கான ஆவலை அதிகரித்துச்சென்றது.
தில்லானாவும் அதே விறுவிறுப்போடு இனிமையைச் சேர்த்தது.
இந்த அழகான சுகானுபவத்தை உணர அணி சேர் கலைஞர்கள் அனைவரும் அந்த மேடைக்கு அளித்த உயிரோட்டத்தை குறைத்துவிட முடியாது.
ஆனால்…
நேரலையிலேயே இவ்வளவு இலயித்ததற்குக் காரணம் மோகனாவின் ஆடலை அவளது சிறுவயது முதல் கண்டு களித்ததால் வந்த ஆவல் மட்டுமா?
என்று என்னையே நான் கேட்டபோது, பதில் ஒரு பழைய நினைவாக என்னுள் வந்து நின்றது.
“அது போர்க்காலம்”
அந்தக் காலத்திலும் நல்லூர்த் திருவிழாக் காலங்களில் இந்தியாவிலிருந்து வந்த பெரும் பரதக் கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் அவ்வப்போது யாழில் நடைபெற்றது. (றமா வைத்தியநாதன், அலர்மேல் வள்ளி போன்றோரின் நிகழ்வுகள் அதில் இன்றும் நினைவிருக்கிறது)
அந்தக் கலைஞர்களின் நடனத்தைத் தான் மட்டும் ரசித்துவிட்டு வீடு திரும்புபவரல்ல எமது குரு. அவரது மாணவர்கள் நாமும் ரசிக்க வேண்டும் என்பதே அவரது ரசனையின் முழுமையாக இருந்தது.
இராணுவக் கெடுபிடிகள் ஒரு புறம்.
காணாமல் போவோர் ஒரு புறம்.
கிளைமோர் அச்சம் இன்னொரு புறம்.
இரவானால் ஊரடங்கு பயம்.
பெற்றோர்கள் அச்சத்தில் பிள்ளைகளை வெளியே அனுப்பத் தயங்கிய காலம்.
2009இற்கு பின்னும் சில வருடம் இருந்த கெடுபிடிகள்
அப்படிப்பட்ட சூழலிலும், எங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்பாடு செய்து, பேருந்தில் அழைத்துச் சென்று, அந்தக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நேரில் காணச் செய்து, ரசிக்க வைத்தவர் எமது குரு.
பல மைல்கள் தொலைவிலுள்ள மேடைகளுக்கு எங்களையும் அழைத்துச் சென்று, மேடையேற்றி, அழகுபார்த்து, பின்னர் எங்கள் வீடுகளிலேயே கொண்டு வந்து சேர்த்த நாட்களுமுண்டு. இன்று அவர் இந்தியாவின் தமிழ்நாட்டு அரங்க நிகழ்வுகள் வரை மாணவர்களை அரங்கேற்றும் பெருமை அற்புதம்.
இதற்காக அவரது கணவர் பேராசிரியர் கண்ணதாசன் அவர்கள் முதற்கொண்டு, குருவின் குடும்பத்தினர் அனைவரும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் என்பதைக் கூற மறக்கக்கூடாது.
அன்று நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பயணித்து, இந்தியப் பெரும் பரதக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து, மெய்மறந்து, பெருமிதத்தோடு வீடு திரும்பிய அந்த ரசனை…
இன்று, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து, ஒரு திரையில் நேரலை வழியே மீண்டும் என்னுள் சுகானுபவமாக உயிர்பெற்றது.
அதை என் அருகில் என் கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதரிகள், நண்பர்கள்…அவர்களுடனும் அந்த நேரலையைப் பகிர்ந்துகொண்டு, ஒரு காலத்தில் எங்கள் குருவோடு பயணித்து ரசித்த அனுபவத்துக்குள் மீண்டும் பயணித்தேன்.
அதனால் தான்.
மோகனாவின் அரங்கேற்றத்தைப் பார்த்தேனா?
அல்லது என் கற்றலின் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை மீட்டினேனா?
என் குருவின் அரங்கில் மீண்டும் ஒருமுறை வாழ்ந்தேனா? எனக்கே தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.
அந்த அரங்கேற்றம் தந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
பல சாதனைகள் செய்தாலும் பெருமிதமின்றித்,
“தன்கடன் பணி செய்து கிடப்பதே” என்ற உணர்வோடு,
கலையின்பமே நிலையின்பம் என்பதைத் தன் வாழ்வாலும் பணியாலும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் எங்கள் குரு…
அவரது கலைப் பயணம் இன்னும் பல அரங்குகளைத் தொடர வேண்டும்.
மோகனா போன்று இன்னும் பல மாணவர்களுடன், ஈழத்தவரின் பரதக்கலையின் பெருமையைப் புலம்பெயர் நாடுகளுக்கும் அவர் எடுத்துச் செல்லும் பயணமாகத் தொடர வேண்டும்.
அதுவே பொன்னாலை நாதனிடம்… என் வேண்டுகோள். செல்வி மோகனப்பிரியா சுதாகரனுக்கு — மனமார்ந்த வாழ்த்துகள்.
எங்கள் குரு சிறிதேவி கண்ணதாசன் அவர்களுக்கு — சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கமும்.
![]()
