இலங்கை திறைசேரியின் கையிருப்பு அதிகரிப்பு இது பொருளாதார மீட்சியின் அடையாளமாகத் தெரிந்தாலும், உண்மையில் இது வருமான அதிகரிப்பால் ஏற்றபட்டதல்ல எனவும் தேவைக்கு அதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களால் ஏற்பட்ட அதிகரிப்பு எனவும் வெரிட்டே ரிசர்ச் அமைப்பு பப்ளிக் பைனான்ஸ் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இலங்கையின் திறைசேரி கையிருப்பு பாரிய அளவில் முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும் அதன் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மறை 832 பில்லியன் ரூபாவாக (negative LKR 832 billion) இருந்த இந்த மீதி, 2025 ஓகஸ்ட் மாத இறுதியில் நேர் 1,205 பில்லியன் ரூபாவாக (positive LKR 1,205 billion) உயர்ந்துள்ளது.
இந்த காசு மீதி அதிகரிப்பானது, அரசாங்கம் தனது செலவுகள் போக மிஞ்சிய வருமானத்திலிருந்து (Revenue) உருவானதல்ல. மாறாக, அந்த நேரத்தில் தேவைப்பட்டதை விட அதிகப்படியான தொகையை கடனாகப் பெற்று, திறைசேரியில் காசாக வைத்திருப்பதாலேயே இது ஏற்பட்டுள்ளது.
பெரியளவிலான காசு மீதி இருப்பதால், அரசாங்கத்திடம் மேலதிக பணம் உள்ளது அல்லது நிதி நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கலாம்.
நிதி அமைச்சின் காசுப் பாய்ச்சல் அறிக்கைகளின்படி (Cash flow statements), 2022 முதல் 2025 ஒகஸ்ட் வரை, அரசாங்கம் தனது பாதீட்டு பற்றாக்குறை மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதலுக்குத் தேவையானதை விட அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது.
இந்தக் கூடுதல் கடன் தொகை, கடனைக் குறைக்கப் பயன்படுத்தப்படாமல், திறைசேரியில் காசு இருப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர நிதித் தேவைகளின் போது உடனடியாக சந்தையில் கடன் வாங்கத் தேவையில்லை.
அதேபோன்று பிணைமுறி ஏலங்களின் (Bond auctions) போது கடன் வழங்குநர்கள் அதிக வட்டி கேட்டால், அதற்குப் பணியாமல் கடன் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க இந்த இருப்பு வழிவகை செய்கிறது. ஆயினும் அரசாங்கம் பயன்படுத்தாத பணத்தை வைத்திருப்பதற்கும் வட்டி செலுத்தி வருகிறது.
இந்த காசு இருப்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி கிடைக்கலாம், ஆனால் கடன் வாங்குவதற்குச் செலுத்தும் வட்டி விகிதத்தை விட இது நிச்சயமாகக் குறைவாகவே இருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாளும் அரசாங்கத்திற்கு நிகர இழப்பு ஏற்படுகிறது. எனவே, நேர்மறையான காசு மீதி குறுகிய கால பணப்புழக்க அழுத்தங்களைக் குறைக்கும் என்றாலும், அது அரசாங்கத்தை ஒரு சிறந்த நிதி நிலையில் (Fiscal position) வைக்காது.
தேவைக்கு அதிகமான காசு மீதியை வைத்திருப்பது கடன் சுமையையும் வட்டிச் சுமையையும் அதிகரிப்பதால், அது ஒரு எதிர்மறையான நிதி விளைவையே ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]()
