கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதுடன், புகையிரத சேவையுடன் தொடர்புடைய முக்கியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதைத் தடுக்கும் வகையில் இலங்கை புகையிரத திணைக்களம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், கடமை தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கியமான தகவல்களை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முக்கியமான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதன் மூலம் புகையிரத சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் ஆகியவை பாதிக்கப்படக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அதிகாரம் புகையிரத பொது முகாமையாளர், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
