தமிழரசு – சங்கு கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பு!
மாகாணசபைத் தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை உரியவாறு கையாண்டு, இவ்வருடத்துக்குள் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் செவ்வாய்க்கிழமை (20) யாழில் கூடி ஆராயவுள்ளன.
மாகாணசபைத்தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்பது மாகாணசபைத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசாங்கம், அதனை உடன் நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகும் எனத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேவேளை அண்மையில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 16 ஆம் திகதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி, பின்னர் பிற்போடப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ளவிரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
![]()
