கஸ்தூரி சலங்கை ஒலி நாட்டிய கலாமன்ற இயக்குனர் திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் கலாநிதிப் (முனைவர்)பட்டம் பெற்றார்.
கடினமான பாதைகளைக் கடந்து பரதக்கலையில் கலாநிதிப் (முனைவர்) பட்டத்திற்கான கற்கை நெறியினை (Doctor of Philosophy) நிறைவுசெய்திருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முது நிலைத் தேர்வு நடுவர் திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள்.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும், தமிழாலய ஆசிரியரும் , கஸ்தூரி சலங்கை ஒலி நாட்டிய கலாமன்ற இயக்குனருமான திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை (Doctor of Philosophy) இன்று நிறைவு செய்திருக்கிறார்கள்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை ஆய்வுநெறியாளர் முனைவர் செ. கற்பகம் அவர்களின் வழிநடத்தலில் தமிழ்நாடு அரச இசைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. சந்திரா அவர்களின் முன்னிலையில் அமைப்பியல் நோக்கில் இசைநாட்டியப் பதங்கள் என்னும் ஆய்வுக்கட்டுரையினை முதுகலைமாணி திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் இன்று (09.01.2026 வெள்ளிக்கிழமை) சமர்ப்பித்திருந்தார்கள்.
அமைப்பியல் நோக்கில் இசைநாட்டியப் பதங்கள் என்னும் ஆய்வேட்டினை மிகச் சிறப்பாக ஆய்வுசெய்து ஆய்வாளர் திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள் எனவும், புலம்பெயர் நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வாளரின் முயற்சி பாராட்டுதற்குரியது எனவும் ஆய்வாளர் ஒரு சிறந்த நடனக்கலைஞர் என்பதனை அவர் வழங்கிய செய்முறைரீதியான விளக்கங்களில் இருந்து அறியமுடிகிறது எனவும், ஆய்வு மதிப்பீட்டாளர்களின் கேள்விகளிற்கும் மிகச்சிறந்த முறையில் ஆய்வாளர் பதிலளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்த தமிழ்நாடு அரச இசைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. சந்திரா அவர்கள் திருமதி. சாவித்திரி சரவணன் அவர்களிற்கு முனைவர் பட்டத்தினை வழங்குவதற்கு தஞ்சாவூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பரதக்கலையில் முதுமாணி (M.A) கற்கைநெறியினை நிறைவுசெய்திருந்த திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் இன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (முனைவர்) (Doctor of Philosophy) கற்கைநெறியினையும் நிறைவுசெய்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ரீதியாக அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்க்கலை ஆசிரியர்களில் கலாநிதி (முனைவர்) பட்ட கற்கைநெறியினை நிறைவுசெய்திருக்கும் மூன்றாவது தமிழ்க்கலை ஆசிரியரான திருமதி. சாவித்திரி சரவணன் அவர்களிற்கும், அவர்களின் கலைப்பணி மேன்மையடையவும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது மனம் நிறைவான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
திருமதி. சாவித்திரி சரவணன் அவர்கள் நீண்ட காலமாக தமிழ்த் தேசியப் பற்றுமிக்க தமிழ்க் கலை ஆசிரியராக இருந்து ஜேர்மன் நாட்டில் பல சிறந்த மாணவர்களை உருவாக்கிவருவதுடன் தமிழக்கலையின் ஊடாக தமிழ்த் தேசியத்திற்கான நிறைவான பங்களிப்புக்களையும் வழங்கிவருவது பாராட்டுதற்குரியது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.
![]()
