ரணிலின் அரசாங்கத்தில் பதில் பிரதமராக செயற்பட்ட சுமந்திரன் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார். தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் சட்டத்திருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, அரசியலில் வங்குரோத்து நிலையடைந்தவர்கள் தற்போது ஏஐ செயலியுடன் தான் மக்கள் சந்திப்புக்களை நடத்துகிறார்கள்.இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படும் இரண்டு ஊடகங்கள் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக சிங்கள குடியேற்றத்தை அமைப்பதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.இனவாதமற்ற வகையில் தான் நாங்கள் செயற்படுகிறோம்.ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்.
வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி தான் உள்ளது. ஆகவே வடக்கு மக்களின் அபிலாசைகளுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக நாங்கள் செயற்பட போவதில்லை. வடக்குக்கான அபிவிருத்திகளை துரிதமாக ஆரம்பிப்போம். எதிர்வரும் மாதம் வடக்கு மாகாணத்தில் குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைப்போம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தேர்தலில் தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார். ரணிலின் அரசாங்கத்தில் சுமந்திரன் பதில் பிரதமராக செயற்பட்டார். அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார். ஒன்றும் இல்லை .
ஆனால் தற்போது இனவாதத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின் வெளிப்படையாக பேசலாம். அதனை தவிர்த்து இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். இந்த நாட்டில் இனவாதத்தால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் அனைவருக்கும் தான் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கிறோம் இதற்கு இனவாதம் என்ற உருவத்தை வழங்காதீர்கள் என்றார்.
![]()
