இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் முற்றாகத் தடை செய்வதற்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய நிலையில் பதிவாகி வரும் பல்வேறு புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோயே முன்னணியில் உள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆய்வுகளின்படி, புகையிலை கலந்த வெற்றிலையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே இந்த பயங்கர வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உயரிய நோக்கில் இந்த அதிரடித் தடை மற்றும் சோதனைகள் நாடளாவிய ரீதியில் முடுக்கிவிடப்படவுள்ளன.
இலங்கையின் தற்போதைய நடைமுறைச் சட்டங்களின் பிரகாரம், புகையிலை கலந்த வெற்றிலைச் சுருள்களை வணிக ரீதியாக விற்பனை செய்தல், விநியோகித்தல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது நுகர்வோரைக் கவரும் வகையில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் ஆகிய அனைத்தும் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
இந்தச் சட்டங்களை மிகக் கடுமையான முறையில் அமல்படுத்தப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர களக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதால், வர்த்தகர்களும் பொதுமக்களும் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
![]()
