பெங்களூர் சிறை அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு தனக்கு பல நெருக்கடிகளை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாக சசிகலா சாடியுள்ளார். 15 பரோல் கேட்டு விண்ணப்பித்த போது கூட எடப்பாடி பழனிசாமி ஏராளமான நிபந்தனைகளை விதித்ததாகவும் விமர்சித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சசிகலா திடீரென புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புதிய கட்சிக்கான கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். திடீரென சசிகலா கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடர்பாக பெரிதாக பேசாத சசிகலா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்றும், அவர் நல்லவரே கிடையாது என்றும் விமர்சித்தார்.
இதையடுத்து சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது நடந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார். அதில் சசிகலா பேசுகையில், பெங்களூரு சிறையில் நான் இருந்தபோது சில அமைச்சர்கள் என்னைச் சந்தித்து சென்னை சிறைக்கு மாறிவிடலாம் என்றார்கள். அதில் செங்கோட்டையன் அழுத்தி இந்த விஷயத்தைச் கூறினார். ஆனால், அதனை நான் மறுத்துவிட்டேன். ஒருவேளை நான் சென்னைவந்திருந்தால், இன்று உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
இதன் மூலமாக கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை சசிகலா மறைமுகமாக பேசியதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர், பெங்களூரில் உள்ள அதிகாரிகளை கையில்போட்டுக்கொண்டு, எனக்கு பல நெருக்கடிகளை கொடுத்தார். இதைவிட, என் கணவர் உடல் நிலை சரியில்லாதபோது 15 நாள் பரோல் கேட்டு, எஸ்.பி. அலுவலகத்தில் இருந்தபோது, இங்கிருந்த அன்றைய ஆணையர் போன் செய்தார்.
அந்த உரையாடலை லவுட் ஸ்பீக்கரில் போட்டார். அந்த ஆணையர், ஐந்து நாள்தான் பந்தோபஸ்த் கொடுக்க முடியும். முதலமைச்சர் இதை சொன்னார் எனத் தெரிவித்தார். அதிலும் 14 கண்டிஷன் போட்டார்கள். செய்தியாளர்கள் சந்திக்க கூடாது, உறவினர்களை சந்திக்கக் கூடாது, மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது. போய்ஸ் கார்டன் வீட்டில் தங்கக் கூடாது என பல கண்டிஷன்களை நான் இங்கு அமரவைத்துவிட்டுச் சென்ற அன்றைய தமிழ்நாடு அரசு போட்டது. என் கணவரின் மரணத்திலும் இதையேத்தான் செய்தனர் என்று கூறினார். இதனிடையே பெங்களூர் சிறையில் இருந்த போது சசிகலா அவ்வப்போது ஷாப்பிங் சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
![]()
