தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட பாம்பன் துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 மீனவர்களையும் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 12 மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையானது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இலங்கை அரசையும், இலங்கை கடற்படையையும் கண்டித்து நேற்று முன்தினம் (21.02.2026) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
![]()
