எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில், நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி. பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் (New kingdom – கி.மு. 16ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை) சேர்ந்த பாரோக்கள், அவர்களுடைய பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. ரோமானியர்களின் காலத்தில் பலர் இந்த இடத்தை பார்த்துச் சென்றிருக்கின்றனர். அப்படி இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் அந்தக் கல்லறைகளின் சுவர்களில் தங்களது பெயர்களை எழுதிச் சென்றிருக்கின்றனர். ஜூல் பெய்லி, இந்தக் கல்லறைகளை 1888-89 காலகட்டத்திலும் 1913–14 காலகட்டத்திலும் ஆய்வுசெய்து, அங்கிருந்த 2,000 கிறுக்கல்கள் அல்லது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டார்.

எகிப்தில் உள்ள ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் – பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள்
தற்போது இந்தக் கல்லறைகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்துகள், மூன்று இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளை எழுதியவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி, மேற்குப் பகுதி, தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் 2024–25ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் போது, தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் பார்வையிட்ட இந்த இடத்தில் இந்திய மொழிக் கல்வெட்டுகள் இருப்பது இதுவரை கவனத்திற்கு வராதது ஆய்வுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் மிகவும் கவனம் ஈர்த்த பெயராக ‘சிகை கொற்றன்’ அமைந்துள்ளது. இந்தப் பெயர் ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சில கல்வெட்டுகள் நுழைவாயிலிலும், சில உயரமான உட்புறச் சுவர்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக ஒரு கல்லறையில் நுழைவாயிலிலிருந்து சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் ‘சிகை கொற்றன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பது, அக்காலத்தில் பார்வையாளர்கள் தங்கள் இருப்பை பதிவு செய்ய எடுத்த முயற்சியின் சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் ‘கோபான் வரத கண்டன்’, ‘சாத்தன்’, ‘கீரன்’ போன்ற பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு மலபார் கடற்கரை வழியாகப் பண்டைய தமிழகத்திலிருந்து எகிப்து மற்றும் ரோமானியப் பேரரசு பகுதிகளுக்குச் சென்ற கடல் வணிகப் பாதைகள் எவ்வளவு விரிவடைந்திருந்தன என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தற்போது நைல் நதிப் பள்ளத்தாக்கின் மையப்பகுதியான மன்னர்களின் பள்ளத்தாக்கு வரை தமிழர்களின் தடம் இருப்பது, அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்லாது, கலாச்சாரத் தொடர்புகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கான புதிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.
![]()
