கடந்த 1990-ஆம் ஆண்டு இடம்பெற்ற குருக்கள்மடம் படுகொலைச் சம்பவம் தொடர்பான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள், எதிர்வரும் மார்ச் மாதம் 30-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
1990-ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்த முஸ்லிம் யாத்திரிகர்கள், மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் மறிக்கப்பட்டனர். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு, அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவி வருகின்றது.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான இந்த விவகாரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களினால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது பாரிய திருப்பத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை (09.03.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில், நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத், அகழ்வுப் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அகழ்வுப் பணிக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நிதி விடுவிப்பில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன. தற்போது நிலவும் சாதகமான காலநிலையை கருத்திற்கொண்டும், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டதை அடுத்து, மார்ச் 30-ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()
