2009ம் ஆண்டு வரை வீறுநடை போட்ட தமிழ் மக்களின் விடுதலை போராட்டம், அநீதியாலும் துரோகத்தினாலும் வீழ்த்தப்பட்ட பின், ஈழத்தமிழினம் உரிமையை கைவிட்டு அபிவிருத்தியையே கேட்டு நிற்கின்றது என்ற பொய் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில் தான், வீழ்ந்து கிடந்த ஈழத்தமிழினம் வீறுகொண்டெழுந்து உரிமை குரல் எழுப்பி நின்ற ஓர் உன்னத நிகழ்வே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி.

எமது தேசிய கவிஞன் புதுவை இரத்தினதுரையின் எண்ணத்தில் உதித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” கவிவரிகளை தாங்கிய மக்கள் எழுச்சி தென் தமிழீழத்தின் அந்தமான பொத்துவில் தொடக்கம் வட தமிழீழத்தின் இறுதி எல்லையான பொலிகண்டி வரை வீறுநடை போட்டது.
வடக்கு கிழக்கு எங்கும் இராணுவத்தையும் புலனாய்வாளர்களையும் குவித்து, திறந்த சிறைச்சாலையாக தமிழ் மக்களை ஒடுக்கி விட்டோம் என இறுமாந்திருந்த சிங்கள அரசின் முகத்தில் அறைந்த நிகழ்வே இதுவாகும். சலுகைக்காக உரிமையை விற்கும் மக்கள் நாம் அல்ல என்பதை சர்வதேசத்திற்கு உரத்து கூறியதும் இந்த எழுச்சியே.
இந்த மக்கள் பேரெழுச்சியின் தொடர்ச்சியாக பிறப்பெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள தேசத்தில் அரசுகள் மாறி உள்ளன. சிங்கள தேசத்தின் இரண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் மாறி மூன்றாவது ஜனாதிபதி இன்று அதிகாரத்தில் உள்ளார். ஆனால் பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பின் நிகழ்ச்சி நிரல் எவ்வித இடைவெளியும் இல்லாது அதே வேகத்துடனே தொடர்கின்றது. இன்று மீண்டும் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு எனும் பெயரில் ஈழத்தமிழினத்தை மீண்டும் ஏமாற்றும் வேலைத்திட்டங்கள் எம்முன்னே அரங்கேறுகின்றன. ஈழத்தமிழினம் மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தயாராக இல்லை. அதன் அடிப்படையில், எம்முன்னே விரிக்கப்படும் சதி வலையை எதிர்கொள்ள கீழ்வரும் விடயங்களை முன்வைக்கின்றோம்.
இனப்பிரச்சனை தொடர்பில் சிறீலங்கா அரசும் சிங்கள தேசமும் இதயசுத்தியுடன் முன்னெடுப்புகளை மேற்கொள்வதாயின், அதன் முன்னோடியாக,
1. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் அகற்றப்பட்டு, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்.
2. தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளான சர்வதேச குற்றங்களை சர்வதேச பொறிமுறை மூலம் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.
3. தமிழர் தாயகத்தில் அரச அனுசரணையுடன் நடைபெறும் பெளத்தமயமாக்கலும், நில அபகரிப்பும் உடனடியாக நிறுத்தப்பட்டு, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த விகாரைகள் அகற்றப்பட்டு, அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
4. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. ஆறாம் திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் வெளி உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன் இனப்பிரச்சனை தொடர்பில் மத்தியஸ்தம் வகிக்க விரும்பும் எந்த நாடும், இவ்விடயத்தில் தமது நடுநிலைமையை வெளிப்படுத்தும் விதத்தில்,
1. ஈழத்தமிழினத்தை ஓர் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. ஈழத்தமிழினத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை அங்கீகரிக்க வேண்டும்.
அத்துடன் இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர தீர்வும் ஈழத்தமிழ் மக்களிடம் சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பினுடாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவே இத்தீவில் நிரந்தர அமைதிக்கு வழியை ஏற்படுத்தும்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியின் உறுதி மொழியான தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான
மரபுவழித் தாயகம்
சுயநிர்ணய உரிமை
தமிழ்த்தேசியம்
என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.
அத்துடன் தமிழ் இனத்தின் மீது மேற்கோள்ளப்பட்ட, தொடர்ச்சியாக மேற்கோள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
என்பதனை மீண்டும் நினைவுறுத்துவதுடன், தமிழர் தேசம் மலரும் வரை எமது போராட்டம் தொடரும் என உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.
நன்றி.
அருட்பணி. து. ஜோசப்மேரி – தலைவர்
தவத்திரு வேலன் சுவாமிகள் – தலைமை ஒருங்கிணைப்பாளர்
![]()
