பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினரை ஆளும் தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் தீவிரச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் இது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தவெகவினரை சிலர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதில் தவெக நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருந்த நிலையில், அவரும் படுகாயமடைந்துள்ளார். கர்ப்பிணிப் பெண் என்பதால் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!
![]()
