கச்சத்தீவு, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இந்த நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், வருகைத்தரவுள்ள பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த இலங்கை கடற்படை தற்போது செயற்பட்டு வருகிறது.

கடற்படைத் தளபதியின் உத்தரவிற்கமைய, வடக்கு கடற்படைப் பகுதித் தளபதியின் மேற்பார்வையின்கீழ், கச்சத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வரவிருக்கும் திருவிழாவிற்குத் தயாராகும் வகையில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், வீதிகள், படகுத் தளங்கள் மற்றும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை தற்காலிக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்களை நிறுத்த உள்ளது.
மேலும், இலங்கை கடற்படையால் கட்டப்பட்ட ஆலயத்தின் வண்ணத் துப்புரவு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர், அதேநேரம், சுற்றியுள்ள பகுதி மற்றும் வளாகத்திற்குச் செல்லும் வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவுக்கு செல்வோர் மற்றும் திருவிழாவிற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
![]()
