மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் வேத மந்திரங்கள் முழங்க நேற்று நிறுவப்பட்டது. 33 அடி உயரமும், 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், பீகார் மாநிலம் மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் சேதுபதி, சுமார் 45 ஆண்டுகள் சிற்பக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர். மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவரிடம், பீகார் தலைநகர் பாட்னா அருகே கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ஒரு கோயிலில்பிரதிஷ்டை செய்ய பிரம்மாண்ட லிங்கம் ஒன்று ஆர்டர் தரப்பட்டது.
அதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் உள்ள குவாரியில் இருந்து 210 டன் எடை கொண்ட கருங்கல் கொண்டு வரப்பட்டது. கனவு கூட்டணியை கணியுங்கள்! Also Read “290 ஐட்டங்களுடன் மருமகனுக்கு மறக்க முடியாத சங்கராந்தி விருந்து.. தலைப்பொங்கல் பரிமாறி அசத்திய கலாவதி” கடந்த 3 ஆண்டுகளாக லோகநாதன் சேதுபதி தலைமையில், இரவு, பகலாக 30 சிற்பிகளை கொண்டு பிரம்மாண்ட சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.
மேல்புறத்தில் 72 லிங்கங்கள் வீதம், 14 அடுக்குகளில் 1008 சிறிய லிங்கங்கள் பொருத்தப்பட்டன. சிற்பம் செதுக்கும் பணிகள் முடிந்த நிலையில், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் 130 டயர்கள் கொண்ட ராட்சத டிரைலர் லாரியில் சிலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இரவு நேரத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேலாக பயணம் செய்து டிசம்பர் மாதம் இந்த சிலை பீகார் சென்றடைந்தது.
இந்நிலையில், இந்த சிவலிங்கம் வேத மந்திரங்கள் முழங்க நேற்று மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பார்வையிட்டார். பிறகு கோயில் வளாகத்தை பார்வையிட்ட நிதிஷ் குமார் அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளையால் கட்டப்படும் விராட் ராமாயண கோவில் 1,080 அடி நீளமும், 540 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.
இதில் 22 சன்னதிகள், 18 கோபுரங்கள் மற்றும் 270 அடி உயர பிரதான கோபுரம் அமைக்கப்படும். ராமாயண காவியத்தை சித்தரிக்கும் காட்சிகள் சன்னதியின் சுவர்களில் பொறிக்கப்படும். கணேஷ் ஸ்தல், சிங் த்வார், நந்தி என அழைக்கப்படும் கோவிலின் நுழைவாயில்கள் மற்றும் கருவறை தூண் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்போது பிரம்மாண்டமான இந்த சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோவிலில் உள்ள சிவலிங்கம் தான் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பிற உலக சாதனைப் புத்தகங்களில் உலகின் மிக உயரமான சிவலிங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒற்றைக்கல் சிவலிங்கம், கிரானைட்டில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கம் என்ற பெருமையைப் பெறுகிறது.
![]()
