இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.
எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம்.
மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இவ்வாறான விவகாரங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பினைப் பேணிவருகின்றோம்.இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர் குழுவொன்று குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் தெரிவித்தார்.
![]()
