அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி 18வீதம் வரை இந்தியாவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க வர்த்தக சந்தையில் எமது ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது. இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற இலங்கை தொலை தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்காவும் இந்தியாவும் திங்கட்கிழமை (2) வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான தீர்வை வரியை நூற்றுக்கு 50 வீதத்தில் இருந்து நூற்றுக்கு 18 வீதமாக குறைத்திருக்கிறது.
அன்று இந்தியாவுக்கு நூற்றுக்கு 25 வீதம் வரி அதிகரிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 25வீத வரி அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 50 வீத வரி அதிகரிக்கப்பட்டபோது அரசாங்கம் மகிழ்ச்சியடைந்தது. ஆனால் உலக அரசியல் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இந்த வரி இந்தியாவுக்கு குறைவடையும் என நாங்கள் தெரிந்திருந்தோம். அதன் பிரகாரம் தற்போது நூற்றுக்கு 18வீதம் வரை இந்தியாவுக்கான வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க வர்த்தக சந்தையில் எமது ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது. அமெரிக்கா எமக்கு விதித்திருக்கும் வரியைவிட 2வீத வரி குறைவாகவே தற்போது இந்தியாவுக்கு விதித்திருக்கிறது. இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் 200 ஆடைத்தொழிற்சாலை வேலைத்திட்டத்தினுல் சிறந்த சேவையை மேற்கொண்டுவந்த மாஸ் நிறுவனம் தற்போது பல தொழிற்சாலைகளை மூடிவிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இதனால் அதிகமானவர்களுக்கு தொழில் இல்லாமல் போகும். புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார்கள். 200 ஆடைத் தொழி்ற்சாலை 76 வருட சாபம் என்றார்கள். ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும்போது நாட்டுக்குள் பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதேபோன்று அரசாங்கம் தேர்தல் காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டது, தற்போது அவர்களை வீதிக்கி இறக்கி இருக்கிறது. கொவிட் காலத்தில் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு சிறந்த சேவை ஒன்றை மேற்கொண்டு கடந்த 7 வருடங்களாக ஆசிரியர் தொழிலை மேற்கொண்டுவரும் இவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()
