அரசாங்கம் முன்னறிவித்தலின்றி திருட்டுத்தனமாக மின்சாரம் மற்றும் நீர் வெட்டுக்களை அமுல்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சபையில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தின் போதே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்றிறன் பாரியளவில் குறைவடைந்துள்ளது.
இதன் விளைவாக, மின் உற்பத்திக்காக டீசலை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதியிலிருந்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது.
“அரசாங்கம் ஏன் இது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.மின்துண்டிப்பு மட்டுமன்றி, நீர் விநியோகமும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 24 மணிநேரமும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், இது மக்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் இழப்புகளை ஈடுசெய்யும் நோக்கில், மக்களை அரசாங்கம் வேண்டுமென்றே நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும், இவ்வாறான “திருட்டுத்தனமான” மின் மற்றும் நீர் வெட்டுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()
