உலகலவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உலகலவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கண்டியில் வெள்ளிக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் எப்போது நிறைவுக்கு வரும் என்பதை எவராலும் ஸ்திரமாகக் கூற முடியாது. எனவே இப்போதிருந்தே வலுசக்தி பயன்பாடுகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதே சிறந்ததாகும். அதனை விடுத்து அன்றாட சேவைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக இருக்காது. மார்ச் முதலாம் திகதியின் பின்னர் எரிபொருள் கொள்வனவு வழமையை விட மூன்று மடங்கால் அதிகரித்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறானா அநாவசிய கொள்வனவுகளைக் குறைந்து வழமையான பயன்பாட்டை தொடர்ந்தால் யாருக்கும் நெருக்கடி ஏற்படாது. எனவே பொது சேவைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. யுத்தம் விரிவடைந்து செல்கின்றமை மற்றும் அதனால் எமது பொருளாதாரத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதேபோன்று ஒவ்வொரு பிரஜைகளும் நாட்டு நலன்கருதி செயற்பட வேண்டும்.
மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைவதில்லை. தித்வா புயலின் போதோ அல்லது தற்போது ஏற்பட்டுள்ள இந்த போர் நிலைமைகளால் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்காகவோ அவர்கள் இணைந்து தீர்வுகள் குறித்து சிந்திக்கவில்லை. மாறாக உலகலவில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைத்த ஆசனங்களை தம்வசப்படுத்துவதற்காக அவர்கள் ஒன்றிணைந்தனர். நெருக்கடிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான பாதையை தேடுவதற்காகவே அவர்கள் ஒற்றுமையை நாடுகின்றனர். பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. எது எவ்வாறிருப்பினும் அரசாங்கம் ஊழல், மோசடிகளை ஒழிப்பதிலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் ஸ்திரமாகவுள்ளது. அரசியல் ரீதியாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதை விடுத்து, நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டுக்காக இணைந்து செயற்படுவோம் என சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
![]()
