உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.
இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்கிறது. அரபிக் கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா கடந்த ஆண்டில் கொள்முதல் செய்த கச்சா எண்ணெய் 41 சதவீதமாக இருந்தது.
ரஷிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த ஆண்டு அக்டோபரில் விதித்த பொருளாதார தடைகளைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கொள்முதலை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறைத்துக்கொண்டன. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரித்தது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, கத்தாா், ஓமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்வதாக மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த வட்டாரம் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையைத் தவிா்த்து பிற பகுதிகளில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளா்கள் முழுவதுமாகச் செயல்பட்டு வருகின்றனா். மோதல் நடைபெறாத பிராந்தியங்களிலிருந்து மேலும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டில் 60 சதவீதம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு கொள்முதல் அளவு 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தவிர, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாள்கள் தற்காலிக அனுமதி அளித்துள்ளது’ எனத் தெரிவித்தன.
இதனிடையே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யத் தொடங்கியிருப்பதாக அந்தத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![]()
