அருவிவெட்டுக்கு வேலையாட்களை வானில் ஏற்றுவதற்காக சென்றபோது, தனது பெறாமகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 17 வயது சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்.

இன்று (10) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்றதாக கருதப்பட்ட வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் சித்தி மேலும் தெரிவிக்கையில்,
சிறுவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும், வாகனம் ஓட்டுவதைத் தொழிலாக செய்து வந்த சிறுவன், பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சாரதி தொழிலை செய்து வந்ததாக சிறுவனின் சித்தி கூறியுள்ளார்.
அத்துடன் அருவி வெட்டும் தொழிலுக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்றபோது தன்னிடம் பணம் இல்லாததால்தான், பொலிஸார் மறித்தபோதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அதனாலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே. குடும்பத்தின் வறுமை காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்கச் சென்றார். அவரை அநியாயமாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என கண்ணீர் மல்க சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்.
![]()
