இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதுடன், ஒருவர் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, இளவாலை காவல்நிலையத்தில் இருந்து 200 மீற்றர் தூரமுள்ள இடமொன்றில் இன்று(08) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவருக்கு சார்பாகவும் அங்கு வந்த இரண்டு குழுவினருக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன்படி, விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
![]()
