கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக “நாம் கிரிப்டோ துறையில் முன்னிலை வகிக்கவில்லை என்றால், சீனா அந்த இடத்தைப் பிடித்துவிடும்,” என டிரம்ப் எச்சரித்துள்ளார். தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா பின்தங்குவதை அவர் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
AI செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்கா தற்போது பெரும் முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கிரிப்டோ துறையிலும் அதே போன்றதொரு ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். “நாம் முன்னிலையில் இல்லையென்றால், இந்நேரம் சீனா முதலிடத்திற்கு வந்திருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் தமது ஆட்சியில் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ (Crypto Capital of the World) மாற்றுவதே இலக்கு என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதற்காக கிரிப்டோ துறைக்கு சாதகமான விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.
இதேவேளை, டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகச் செயல்படுகிறது.சமீபத்தில் டிரம்ப் குடும்பத்தின் கிரிப்டோ நிறுவனமான ‘வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்’ (World Liberty Financial) சர்வதேச முதலீடுகளை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) டிரம்ப் எதிர்த்தாலும், பிட்கொயின் மற்றும் பிற கிரிப்டோக்களை அமெரிக்காவின் பொருளாதாரப் பலமாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
![]()
