11 பேருடன் மாயமான ATR 42-500 ரக விமானம் – மலைப்பகுதியில் சிதைவுகள் கண்டுபிடிப்பு!
இந்தோனேசியா: ஜாவா தீவின் யோக்யகர்த்தா நகரில் இருந்து தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் 11 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று மாயமாகியுள்ளது.
யோக்யகர்த்தா நகரில் இருந்து தெற்கு சுலவாசி நோக்கி விமானம் சென்றது. தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் (Maros) நகர் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் மலைப்பாங்கான பகுதியில் பறந்தபோது இந்த தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி, முற்றிலும் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணித்த 11 பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேடுதல் பணியின்போது, தெற்கு சுலாவேசி மாகாணத்தில் உள்ள புலுசராங் மலையில் (Mount Bulusaraung) விமானத்தின் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ‘பசர்னாஸ்’ (Basarnas) எனப்படும் இந்தோனேசியத் தேசியத் தேடுதல் மற்றும் மீட்பு முகமை, ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளது.
விமானம் தரையிறங்குவதற்காகச் சரியான பாதையில் வரவில்லை என்றும், அதனைச் சரி செய்யுமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை (ATC) அறிவுறுத்திய சிறிது நேரத்திலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நிலவிய மேகமூட்டமான வானிலையும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அப்பகுதியில் அடர்ந்த மூடுபனி மற்றும் கரடுமுரடான மலைப்பாதை இருப்பதால், மீட்புக் குழுவினர் சிதைவுகள் உள்ள இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உள்ளே இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தோனேசியா ஏர் டிரான்ஸ்போர்ட் (IAT) நிறுவனத்தால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம், இதில் 8 ஊழியர்கள் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 11 பேர் இருந்தனர். இந்தப் பயணிகள் அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
![]()
