யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வான் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வான் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வானை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வானை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்ட போது , வாகனத்தினுள் இருந்த சிறுவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவனை உடனடியாக மீட்டு , பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
குறித்த வானின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வானில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
