அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு மற்றும் பனிப் புயல் காரணமாக பல்வேறு மாகாணங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசமான வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெய்ன் மாகாணத்தில் உள்ள பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணியளவில் தனியார் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 8 பேர் பயணித்த நிலையில், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட 45 வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
உடனடியாக விமான நிலையத்தில் மீட்புப் படையினர் தீயை அணைத்த நிலையில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
விபத்து நடந்தபோது கடுமையான பனிப்புயல் வீசிக் கொண்டிருந்ததாகவும், மோசமான வானிலையே விபத்துக்கான காரணம் என்றும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதல்கட்டத் தகவலை வெளியிட்டுள்ளது.
![]()
